ராகம் – ராகமாலிகை தாளம் – ஆதி
ஜோன்புரி
மரங்கள் நெடிதுயர்ந்த ஆரண்யம்
முனிவர்கள் தவம் செய்த தபோவனம்.
ஹரிநாமம் எதிரொலிக்கும் பெருங்கானகம்.
பேரின்ப வழிகாட்டும் நைமிசாரண்யம்.
ஹிந்தோளம்
தருப்பை நேமிச்சக்கரம் உருண்டு முனிவர்க்கும்
தேவர்க்கும் தவம் செய்யக் காட்டிய இடம்.
ஆரண்யமே இறையாய் உணர்த்தும் ஆலயம்.
அமரர் தலைவனுறை நைமிசாரண்யம்.
சிவரஞ்சனி
வல்வினை பயந்த மனத்தனனாகியே
மாய வாழ்வினையே மெய்யென நினைத்தேன்.
ஐம்புலன் ஆசையை அடக்கிடலறியேன்.
யாக்கை நோயினை அறுத்திடலறியேன்.
சிந்து பைரவி
மதன் பாணம்தனை விலக்கிடலறியேன்.
நெஞ்சினால் வாயினால் உந்தனை நினையேன்.
மதம் பிடித்த மனம் ஆசையில் அலைபாய
மனித விலங்காகி இன்பம் தேடினேன்.
பாகேஸ்ரீ
வண்டினம் முரலும் ஸ்ரீஹரிநாமம்.
மரணபயம் நீக்கிடும் நைமிசாரண்யம்.
புண்டரீக வல்லியின் திருமுக தரிசனம்.
பிறவி நோயறுக்கும் ஒரு துணையாகும்.
சுருட்டி
வானவர்க்கரசே தேவராஜனே
வாடியே வருந்தும் என் துயர் களைவாயே
வினைப்பயன் மறந்த என் பிறவிப்பிணியின்
விதியினை மாற்றும் உன் பதம் பணிந்தேனே.