ராகம் – ராகமாலிகை தாளம் – ஆதி
சக்கரவாகம்
திருமலையென வழங்கிவரும் திருவேங்கடம்
திருமாலும் அருள்புரியும் ஸ்ரீவைகுந்தம்
திருப்பதி நூற்றிஎட்டில் ஒரு தலமாம்.
திருப்பதிக்குச் சென்று வந்தால் வாழ்வும் நலமாம்.
மோகனம்
திருமாலை மணம் புரியத் தவக்கோலம்.
திருச்சானூரில் அன்னைஎழிற் கோலம்.
திருமலையில் நாளும் திரு மணக்கோலம்.
தெருவெங்கும் காணும் திருவிழாக்கோலம்.
பௌளி
இருள்பிரியும் வேளையிலே சுப்ரபாதம்
இனிதே தொடர்ந்திடும் சஹஸ்ரநாமம்.
தரிசிப்போர் நாவில் கோவிந்தன் நாமம்
தரணியை வாழவைக்கும் தாரகமந்திரம்.
அடாணா
ஓரிரண்டு மூவடியால் மாவலி சிரம்
மூவுலகும் தானளந்த திருப்பாதம்.
ஒருகல்லைப் பெண்ணாக்கிய புனித பாதம்.
உருகிச் சரணடைந்தால் தரும் மோட்சம்
சஹானா
இருபுறமும் தேவியுரு தாங்கும் நெஞ்சகம்
பிருகு முனியின் பாதம் பட்ட கதை சொல்லும்.
திருவாழிசங்கு சக்கரம் தாங்கிடும் புயம் .
இடர்தீர்க்கக் காத்திருக்கும் அபயகரம்.
சிவரஞ்சனி
ஹரியின் புகழ் பாடும் ஓர் ஆயிரம் நாமம்
சாளக்கிராம மாலையுடன் துளபமாலையும்
பருத்த இரு தோள்களிலே தவழ்ந்திருக்கும்
புரிநூலும் கண்டாலே மெய்சிலிர்க்கும்.
ஸ்ரீ ராகம்
திருமண்காப்பில் ஒளர் கருவிழிகளும்
திருவருளை வாரியே வழங்கி நிற்கும்.
திருமுடியில் வயிரம் மின்னும் மணிமகுடம்
இருள்நீக்கி ஞான ஒளி வீசி நிற்கும் .