ராகம் – நடபைரவி தாளம் – ஆதி
பல்லவி
பரமபத நாதன் வந்தான் ஆதிகேசவனாய்
பரமபதம் நமக்கருளும் சேரநாட்டு ரங்கனாய். (பரம)
அனுபல்லவி
மரகதவல்லித் தாயும் அருகிலிருக்க
அரவணையில் ஆதி அனந்த ஸ்தானம் துயில்கின்றான் (பரம)
சரணம் 1
சூரிய ஒளியும் அவன் திருமேனியிலே
கரங்களால் தீண்டியே மகிழ்ச்சி பெறும் இடமே
பரசுராம க்ஷேத்திரமாம் வாட்டாற்றினிலே
நாரணனே விண்ணிலிருந்து விரும்பி வந்தானே! (பரம)
சரணம் 2
பாரதத்தில் பாண்டவர்க்காய்த் தூது சென்றவன்.
இரணியனைக் கொன்றவன் வேத நாயகன்.
இருள் தருகின்ற ஞாலத்தில் அடியவர் பின் சென்று
நரகம் புகாது காக்கும் வள்ளலாகின்றான். (பரம)
சரணம் 3
ஆரம் போலக் கங்கையாறும் தாமிரபரணியும்
இருக்கும் வாட்டாற்றில் கண்வளரும் பிரானே.
திருவனந்த புரம் போலே மூன்று வாசலில்
தரிசனம் தந்தே நமக்கு அருள் புரிகின்றான். (பரம)