ராகம் – கௌள தாளம் – ஆதி
பல்லவி
பரமபத நாதன் அஷ்டாங்க விமானத்தில்
பரமேச்சுர விண்ணகரில் காட்சியளிக்கின்றான் (பரமபதநாதன்)
அனுபல்லவி
உரந்தரு மெல்லணையிலே பள்ளிகொண்ட முகுந்தன்
வரம்தரு மாமணிவண்ணன் பேரருள் புரிகின்றான். (பரமபதநாதன்)
சரணம்
அரிஉருவாய் நின்றவன், அண்டம்யாவும் உண்டவன்,
கரியைக்காக்க வந்தவன், காளை ஏழும் அடக்கியவன்.
குரக்குப் படைகொண்டு கடல் கடந்திலங்கை அழித்தவன்.
பாருலகைக் காக்க வைகுந்த வல்லியுடன் வந்தான் (பரமபதநாதன்)