ராகம் – நாட்டை தாளம் – மிஸ்ரசாபு
பல்லவி
வனமும் மலையும் சேர்ந்த இடத்தில்
தானாய்த் தோன்றிய ஸ்வயம்பு க்ஷேத்திரம்.
நான்கு ஏரி சூழ் நந்தவர்த்தன
விமானம் கீழருளும் நாங்குனேரியே. (வனமும்)
அனுபல்லவி
அனந்தன் தவம்செய்து பரமன் விரும்பும்
நாகணையாகும் வரம் பெற்றானே.
வானத்து ஊர்வசி திலோத்தமையுமே
வெண்சாமரம் வீசும் பேறு பெற்றாரே (வனமும் )
சரணம்
வானமாமலை சிரீவர மங்கையின்
தெய்வ நாயகப் பெருமாளே!
வானவர் கொழுந்தே! அடியவர் நெஞ்சில்
புகுந்து அருளுகின்ற தேவனே!
அனுதினம் செய்யும் அபிஷேக எண்ணெய்
அனைத்துப் பிணிகளுக்கும் மருந்தாமே..
மனம் குளிர்ந்திடவே பரிகாரமாகும்
சேற்றுத் தாமரை குளமே. (வனமும்)