
ராகம் – சிவரஞ்சனி தாளம் – ஆதி
பல்லவி
பல்லவி
ஒருமுறை உன் பெயரே சொல்லிடுவேன்
கரம்பனூர் உத்தமனே! புருஷோத்தமனே! (ஒருமுறை)
அனுபல்லவி
புராண இதிகாசம் வேத ஆகமங்கள்
ஒருங்கே கரம்பனூரைப் புனிதம் ஆக்கிடுதே (ஒருமுறை)
சரணம் 1
பரமனும் அரனாரும் ஓதும் வேத ஒலியும்,
பெருக்கெடுத்தோடும் கங்கையின் நாத ஒலியும்,
அருகோடும் காவிரியின் இன்னிசை ஒலியும்,
அரவணையில் கேட்டுறங்கும் வேதமுதல்வனே! (ஒருமுறை)
சரணம்2
பிரம்மஹத்தி தோஷம் நீங்கச் சிவனின் பிட்சையில்
பூர்வாதேவி நிரப்பியதும் சாபம் நீங்கியதே.
பாருண்டு உமிழ்ந்தவனே பிரம்மன் சிவனுடன்
அருள் நடந்து தீவினைகள் போயகலச் செய்வாயே. (ஒருமுறை)