ராகம் – சாருகேசி தாளம் – ஆதி
பல்லவி
திருவாகிய திருமகள் திருவுக்குத் திரு நாரணன்
திருமணம் புரிந்த இடம் பஞ்ச கிருஷ்ண க்ஷேத்திரம். (திரு)
அனுபல்லவி
அரிய இந்தக் காட்சியைக் காண தேவர் கூடியே
உருமாறியே தேனீக்களாய்ச் சன்னதியை வலம் வருவரே. (திரு)
சரணம் 1
உருஇழந்த சந்திரனின் சாபம் தீர்ந்த இடம்.
ஓர்இரவு தங்கினாலும் முக்தி தரும் க்ஷேத்திரம்.
குருவாய்த் திருமங்கையை ஏற்றுச் சீடனாகிய
நாரணனின் எளிமை காட்டும் கிருஷ்ண மங்கள க்ஷேத்திரம். (திரு)
சரணம் 2
தர்சன புஷ்கரணி நீரில் அபிஷேகம் செய்தே
திருமகள் அபிஷேகவல்லி பட்ட மகிஷி ஆனாளே.
மருந்தாகி இம்மைக்கும் மறுமைக்கும் உதவிடும்
கிருஷ்ணபுரி பத்தராவியின் சப்தாம்ருத க்ஷேத்திரம். (திரு)