
ராகம் – பிருந்தாவனசாரங்கா தாளம் – ஆதி
பல்லவி
மின்இலங்கு திருஉருவே! சௌந்தரராஜனே!
புன்னகையில் எனை அழைக்கும் நாகை வாழ் அழகனே! (மின்)
அனுபல்லவி
பொன் மலையின் மேலெழுந்த கார்முகில் வண்ணனே!
நன்மகனாம் துருவனையும் கவர்ந்த நாராயணனே! (மின்)
சரணம் 1
அன்றாயர் குலம் காத்த நீலமேக கோவலனே!
நின்றாய் கோவிந்தனாய் நடந்தாயே கண்ணனே!
மன்மதன்போல் அரிதுயிலும் திருவரங்க நாதனே!
துன்மதியாம் இரணியனை வதைத்த நரசிம்மனே! (மின்)
சரணம் 2
அன்றலர்ந்த தாமரைக் கண்களிரண்டும் மின்னும்.
குன்றெடுத்த தோளிரண்டும விரிந்து இருக்கும்
மின்னும் மகரக் குழைகள் அழகாய்அசைந்து ஆடும்
நன்மலர் நறுந்துழாயும் திரு மார்பினில் தவழும். (மின்)
சரணம் 3
அன்புக் கரங்களிரண்டும் ஆழி சங்கம் தாங்கும்.
அன்னை திருமகள் உருவம் அருள்புரியும் நாளும்
பொன் பாதம் சரணடையும் அடியவரின் கூட்டம்,
மனமாசு தீர்ந்து இரு வினையை விரைந்தோட்டும் (மின்)