ராகம் – மத்யமாவதி தாளம் – ஆதி
பல்லவி
பரமபதத்தின் தேவாதிதேவன் பாற்கடல் நாயகனே.
சரணம் அடைந்தால் முக்தி தரும் நாரணனின் பதமே (பரம)
அனுபல்லவி
இருவினை தீர்க்கும் அருமருந்தாம் இதயஒலி அவனே.
இருள் கடி தீபமாய் அடங்கா நெஞ்சினை அடக்கிடும் ஆழிப்பிரானே. (பரம)
சரணம் 1
மறை நான்குடனே பூமியைக் காத்திட எடுத்த பத்து அவதாரமே
நீரில் மீனாய் ஆமை வராகமாய் வந்தவன் திருமகள் மணாளனே.
ஒரடி ஈரடி மூவடியாய் உலகம் அளந்த வாமனன் விக்கிரமனே.
நரஹரியாய் ஒரு சிறுவனைக்காத்திட நரஸிம்மன் ஆனவனே. (பரம)
சரணம் 2
ஒருதாரமுடன் உலகினில் வாழ்ந்த சீதாராமனும் அவனே.
கருமுகில் கண்ணன் கோபியர் மனம் கவர்ந்த கோகுலபாலனே.
பரசு ராமனும் பலராமனும் கல்கியும் அவன் அவதாரமே.
அர்ச்சா ரூபமாய் கோயிலிலருள்வதும் உலகினைக் காக்கும் நாரணனே. (பரம)