ராகம் – ஹமீர் கல்யாணி தாளம்- கண்டசாபு
பல்லவி
ஆயர்பாடிக் கண்ணனே! வடமதுரை மன்னனே!
ஆய்ப்பாடியில் <கன்று மேய்த்து குன்றமேந்திய பாலனே! (ஆயர்பாடி)
அனுபல்லவி
பேய்ச்சி முலையுண்டு பூதகி உயிர் குடித்தவனே
பையரவு காளிங்கனை அடக்கி நடம் புரிந்தவனே (ஆயர்பாடி)
சரணம் 1
தாயன்பில் கட்டுண்டாய் உள்ளங்கவர் கள்வனே!
மாயச்சகடம்தனை உதைத்து மருதினையே இறுத்தவனே!
வையம்உய்ய கீதைசொன்ன வேதநாயகனே!
மாயக்கூத்தனே! ருக்மணி சத்யபாமை நாதனே! (ஆயர்பாடி)
சரணம் 2
வேய்ங்குழல் ஊதியே கோபியர் மனம் கவர்ந்தவனே!
வையம் ஏழும் உண்டவனே! கோவலனே! கோவிந்தனே!
தீயன் கஞ்சனை அழித்த மோகன கிருஷ்ணனே!
ஆய்ப்பாடியின் அணிவிளக்கே! யமுனைத்துறைவனே! (ஆயர்பாடி)