ராகம் – ஆகிர்பைரவி தாளம் – ஆதி
பல்லவி
மண்ணின் பாரம் நீங்கப் பிறந்தாய் வடமதுரையிலே
மண்காக்கக் குடைபிடித்தாய் கோவர்த்தன மலையே (மண்ணின்)
அனுபல்லவி
எண்ணிலா கோபியர் மனம் கவர்ந்த கோகுல பாலனே!
பண்ணிசைத்து வேய்ங்குழல் ஊதும் வேணு கோபாலனே! (மண்ணின்)
சரணம் 1
மண்மடந்தை சத்ய பாமையின் மணவாளனே!
கண்ணனே! தேவகி குடல் விளக்கம் செய் தாமோதரனே!
பாண்டவர் தூதனே! பார்த்தன் தேரூர்ந்தவனே!
கொண்டல் நிற வண்ணனே! யமுனைத் துறைவனே! (மண்ணின்)
சரணம் 2
கூன்முதுகு ஒடுங்கிடவே குளிர் சாந்தம் இட்டவனே!
வன்மல்லரை, மதவேழத்தை அடக்கிய நல் வீரனே!
மன்னவன் கஞ்சனையும் மாய்த்தே அழித்தவனே!
அன்னை தந்தை கால் விலங்கை அறுத்து எறிந்தவனே! (மண்ணின்)