ராகம் – ராகமாலிகை தாளம் – ஆதி
மாண்டு
வான்கிளர்ந்தெழும் வான்முகில்காள்
வானவர்க்கரசனைக்காணப் போதிரோ?
வானுயர்ந்த மலை உச்சியின் மீது,
முக்தி நாதனைக் காட்டுதிரோ?
பீம்ப்ளாஸ்
வெண்பனி மலை சூழ்ந்தரணாகும்,
வானுயர் மரம் எழில் பொழிலாகும்.
கண்டகி நதியில் தவழும் கற்களோ
கடவுள் உரு காட்டும் சாளக்கிராமம்.
ஹம்ஸானந்தி
உலகம் ஈரடியால் அளந்த மாயனே!
உலகம் ஈரேழும் உண்டவனே!
நிலம் கீண்டு ஏனமுமாய் வேதம் காத்தவனே!
மலையரசனே! எங்கள் புருடோத்தமனே!
காபி
ஆழிசூழ் உலகினை ஆளும் தலைவனே!
ஆயிரம் நாமங்கள் தாங்கும் நாரணனே!
ஆழிசங்குடன் துளப மாலையுமணிந்தவனே!
தேவியருடனே அருள்புரிகின்றாய்.
மத்யமாவதி
வானாய், மண்ணாய், நீராய், காற்றாய்,
நெருப்பாய் உலகியக்கிடும் பரம்பொருளே!
பனிமுகில் வண்ணனே! தொடர்ந்திடும் பிறவிப்
பிணியினை அறுத்திடும் தேவதேவனே!