
ராகம் – கானடா தாளம் – ஆதி
பல்லவி
செங்கமலத் திருமகளும் பூமகளும் அடிவருடும்
பங்கயக் கண்ணனே! மலர்ப்பதங்கள் வாழியவே (செங்கமல)
அனுபல்லவி
சங்கம் இடத்தானே! தழலாழி வலத்தானே!
இலங்கை அழித்தானே! வரியரவில் துயின்றவனே! (செங்கமல)
சரணம் 1
செங்கண் மாலின் கிருஷ்ண க்ஷேத்திரத்திலே
மங்காப்புகழ் திருவழுந்தூர் எழுந்தருளும் கேசவனே!
சிங்கபிரானை வணங்கும் பிரகலாதனும் காவிரியும்
நீங்காது கருடனுடன் கருவறையில் உடனுறையும் (செங்கமல)
சரணம் 2
ஓங்கி உலகமளந்த தேவராஜனே!
நரசிம்மன் திருமங்கை கம்பனுடனே
எங்கும் அருள்மாரி கண்ட ஆமருவியப்பனே!
எங்ஙனம் மறப்பேனோ நாகணயில் துயில்வோனே! (செங்கமல)